துருக்கியில் உள்ள ஒரு நடுநிலை பள்ளியில் 14 வயது மாணவன் நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். துருக்கியின் கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் ஒரு மாணவன் 8ம் வகுப்பு படித்து வந்தான். இவன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை புத்தகப்பையில் மறைத்து வைத்து கொண்டு நேற்று பள்ளிக்கு வந்தான். திடீரென பள்ளியில் 5ம் வகுப்பு நடைபெறும் 2 வகுப்பறைகளுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக சுட்டான்.
பிறகு அந்த மாணவனும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவத்தில் 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மாணவனின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்த அதிர்ச்சியூட்டும் காணொளிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப துருக்கி அரசு தடை விதித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி கூறுகையில், காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது அந்த மாணவன் தனிப்பட்ட விரக்தியில் நடத்திய தாக்குதலே தவிர, பயங்கரவாத செயல் அல்ல’ என்றார். ஏற்கனவே நேற்று முன்தினம் சன்லியுர்ஃபா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 16 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளது. அதிலும் அங்கு துப்பாக்கி சூடு நடப்பது மிகவும் அரிதானது. அப்படி இருக்கையில் 2 நாட்களில் தொடர்ச்சியாக 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
