Skip to content

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிப்பு நடந்த கார் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில் திடீரென வெடித்ததால், அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் காரின் பாகங்கள் சிதறி, சுற்றியுள்ள வாகனங்கள் சேதமடைந்தன.வெடிப்பு நடந்த உடனே டெல்லி போலீசார், என்ஐஏ (NIA), என்எஸ்ஜி (NSG) உள்ளிட்ட முக்கிய புலனாய்வு அமைப்புகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. சிசிடிவி காட்சிகள், தடயங்கள் சேகரிப்பு, சாட்சிகள் விசாரணை உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு செய்து, “எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கிறது” என்று உறுதி அளித்தார்.

இது விபத்தா அல்லது இது பயங்கரவாத தாக்குதலா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA), பாரதிய நியாய சட்டம் (BNS) வெடிபொருட்கள் பிரிவுகள் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரை ஓட்டி வந்தது காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் நபி என்ற தீவிரவாதி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காரை நீண்ட நேரம் பார்க்கிங்கில் நிறுத்திய பிறகு மெதுவாக இயக்கிய நிலையில் வெடிப்பு நடந்தது.

சந்தேகத்தின் பேரில் முகமது உமர் நபியின் தாய் மற்றும் சகோதரரை காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகமது உமர் தலைமறைவாக உள்ளார். அவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவரா என்றும் விசாரிக்கப்படுகிறது. வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் வகை, எப்படி காரில் பொருத்தப்பட்டது உள்ளிட்டவை தீவிரமாக ஆராயப்படுகின்றன.இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை, பாராளுமன்றம் அருகே நடந்ததால் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. அமித் ஷா “எந்த கோணத்திலும் விசாரணை நடக்கும், குற்றவாளிகள் தப்ப முடியாது” என்று உறுதி அளித்தார். என்ஐஏ, என்எஸ்ஜி, டெல்லி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!