செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள, பூதூர் கிராமம் வழியாக மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, விவசாய நிலம் ஒன்றில் இருந்த மின்மாற்றியில் ஏற்பட்டிருந்த பழுதை சரிசெய்த பின்னர் அருகிலுள்ள மின்கம்பத்தில் ஊழியர்கள் ஏறி மின் இணைப்பை கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைக் கண்ட மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது வாகனத்தை சற்று தள்ளி நிறுத்திவிட்டு, மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் அருகில் சென்று பொதுமக்கள் போல பார்வையிட்டிருக்கிறார்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மின்வாரிய உதவி செயல் பொறியாளரிடம் அங்கு என்ன நடக்கிறது? மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக்

கொண்டிருப்பவர்கள் மின்வாரிய ஊழியர்களா? அல்லது தனி நபரைக் கொண்டு பழுது பார்க்கின்றனரா? என ஏதும் அறியாதவர் போல கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்வாரிய உதவி செயல் பொறியாளரோ, தன்னிடம் கேள்வி கேட்பவர் யார் எ

ன்று தெரியாமல் மின் துறை ஊழியர்கள் தான் பணி செய்து கொண்டிருக்கின்றனர் என பதில் அளித்துள்ளார்.
அவரிடம் அமைச்சர் சிவசங்கர், மின்வாரிய ஊழியர்கள் எனில் சீருடை அணியாமல் ஏன் பணி செய்கின்றனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்வாரிய உதவி செயற்பொறியாளரோ அங்கு பணி செய்பவர்கள் சீருடை அணிந்துள்ளனர் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து மின் உதவி செயற்பொறியாளரிடம் என்னை தெரிகிறதா? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்ப அதற்கு அவர் தெரியவில்லை என பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அமைச்சர் நான்தான் சிவசங்கர் எனக் கூறும் வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தன்னிடம் கேள்வி கேட்பவர், தான் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் மின்சார துறையின் அமைச்சர் என்பதை அறிந்தவுடன் உடனடியாக அமைச்சரிடம் கைகுலுக்கி தான் உதவி செயற்பொறியாளர் என்றும், விவசாய நிலத்தில் சேரும் – சகதியும் அதிகமாக இருப்பதால் சீருடையின் மேலே டிரவுசர் போட்டுக்கொண்டு பணியாற்றுவதால் பார்ப்பதற்கு அப்படி தெரிகிறது என விளக்கிக் கூறினார்.
சில இடங்களில் மின்வாரிய ஊழியர்களுக்கு மாற்றாக தனிநபர்கள் ஏறி பணி செய்வதும், அசம்பாவிதம் ஏற்பட்டு தேவையற்ற நிகழ்வுகள் நடந்தேறுவதும் அவ்வப்போது தொடர் கதையாகிறது. ஆகையாலேயே தனது வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தி நடந்தே வந்து, பணி செய்வது யார்? என கேட்டதாக தெரிவித்த அமைச்சர் மின் சீரமைப்பு பணியை தொடருங்கள் எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

