Skip to content

வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (32). இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும், அவரது இரண்டு வயது மகன் திருக்குமரனும் மட்டும் இருந்துள்ளனர். நேற்று காலை தனது மகனுக்குப் பால் காய்ச்சுவதற்காக பாரதி அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பாரதியின் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தது.

தொடர்ந்து பாரதி மற்றும் அவரது மகன் திருக்குமரன் ஆகியோர் உடல் முழுவதும் தீ பரவி எரிந்த நிலையில் வெளியே ஓடி வந்துள்ளனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை திருக்குமரன் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி திருக்குமரன் உயிரிழந்தான். மேலும் தந்தை பாரதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேஸ் சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் காட்டாங்குளத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!