Skip to content

சத்தீஷ்காரில் பயங்கரம்: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோடாரியால் வெட்டிக்கொலை

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம், கொஸ்ரா கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், கடந்த டிசம்பர் 31-ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பரிசோதனையில், சிறுமி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான 24 வயது இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அந்த இளைஞர் சிறுமியைக் கடத்திச் சென்று தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதும், அதற்கு மறுத்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கோடாரியால் வெட்டிக்கொன்றதும் தெரியவந்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகக் கைதான இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் போலீசார் வெளியிடவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் சமயத்தில், ஒரு சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

error: Content is protected !!