Skip to content

ஆடுகளிடம் இருந்து ரத்தம் திருட்டு: 130 பாக்கெட்டுகள் பறிமுதல் – தெலங்கானாவில் பயங்கர மோசடி அம்பலம்

தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில், உயிருடன் இருக்கும் ஆடுகளின் உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து, ஆய்வகங்களுக்கு விற்பனை செய்த மட்டன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.

சத்தியநாராயணா காலனியில் உள்ள ஒரு சிக்கன் மற்றும் மட்டன் கடையில், ஆடுகளின் உடலில் இருந்து ரகசியமாக ரத்தம் உறிஞ்சப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சோதனையிட்டனர். அப்போது, மனிதர்களிடம் ரத்தம் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் 130 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் ரத்தம் நிரப்பப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்: கடை உரிமையாளர் சுந்தர்சோனு மற்றும் ஊழியர் அகில் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடுகளைக் கொல்லாமல், அவை உயிருடன் இருக்கும்போதே ஊசி மூலம் ரத்தத்தை மட்டும் தனியாக உறிஞ்சி எடுத்துள்ளனர். இந்த ரத்தம் கச்சேகுடாவில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனம் மூலம் மருத்துவ ஆய்வகங்களுக்கு (Medical Labs) அனுப்பப்பட்டுள்ளது. அங்கு இந்த ஆட்டு ரத்தம் பிளேட்லெட்டுகள் (Platelets) தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆடுகள் உயிரிழப்பு: மருத்துவர்களின் மேற்பார்வை இன்றி மிகக் கொடூரமான முறையில் ரத்தம் உறிஞ்சப்படுவதால், அந்த ஆடுகள் அன்று மாலைக்குள் தானாகவே உயிரிழந்து விடுகின்றன. அதன் பிறகு அந்த ஆடுகளை இறைச்சியாக வெட்டிப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

போலீசார் 130 ரத்த பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து, சுந்தர்சோனு மற்றும் அகில் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆய்வகங்களுக்குச் சட்டவிரோதமாக ஆட்டு ரத்தம் விநியோகம் செய்யப்பட்டது குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!