நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மில்லிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் வந்துள்ளது. நேற்று கூடலூர் தபால் நிலைய அலுவலர்கள், இந்திராணி வேலை செய்து கொண்டிருந்த தேயிலைத் தோட்டத்திற்கே நேரில் சென்று அந்த முக்கிய கடிதத்தை அவரிடம் வழங்கினர்.
தன்னைப் போன்ற ஒரு சாதாரணத் தொழிலாளிக்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டு இந்திராணி நெகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தார். அவருக்குத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

