Skip to content

கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…

கோவை மாநகரின் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஸ்ரீதேவி ஜவுளிக்கடை வாகன நிறுத்தும் இடத்தில், தாராளமாக வளர்ந்து நின்ற கஞ்சா செடி இன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்திலேயே கஞ்சா செடி வளர்ந்து இருப்பது காவல் துறையினரை அதிர வைத்து உள்ளது.

ஸ்ரீதேவி ஜவுளிக்கடை நிர்வாகம் அண்மையில் நான்கு சக்கர வாகனங்களுக்காகப் புதிதாக ஒதுக்கி உள்ள பார்க்கிங் பகுதியின் கடைசியில், சுமார் 3 அடி உயரம் கொண்ட இந்த கஞ்சா செடி எவ்வித அச்சமுமின்றி செழித்து வளர்ந்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​இந்த விவகாரம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வளர்ந்து நின்ற கஞ்சா செடியைப் போலீசார் வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்தினர்.

இந்தச் செடி தானாக வளர்ந்ததா ? அல்லது யாராவது ? திட்டமிட்டு நட்டு வளர்த்தார்களா ? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகரின் மிக முக்கிய வணிகப் பகுதியில், எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு செடி வளர்ந்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

​குறிப்பாக, வாகன நிறுத்தும் இடத்தைப் பராமரிக்கும் ஊழியர்கள் மற்றும் அங்கு உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!