தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது, நீச்சல் போட்டியில் பங்கேற்ற குடும்பத் தலைவர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்கு காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (40). திருமணமான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், ஆனைக்காடு ரோடு பகுதியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவையொட்டி, பிள்ளையார் கோயில் அருகே இருந்த குளத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மணிகண்டன் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்.
சக போட்டியாளர்களுடன் குளத்தில் நீந்திய மணிகண்டன், மறுமுனை கரையைத் தொட்டுவிட்டு மீண்டும் திரும்ப முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குளத்தில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டார். மற்ற வீரர்கள் தொடக்க இடத்திற்குத் திரும்பிய நிலையில், நீண்ட நேரம் ஆகியும் மணிகண்டன் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் அவரைத் தேடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் சிக்கி உயிரிழந்த மணிகண்டனின் உடலை மீட்டனர்.
போட்டியின்போது தனது தந்தை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கரையில் நின்றபடி “அப்பா… அப்பா…” என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த அவரது குழந்தைகள், தந்தை சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு கதறி அழுத காட்சி காண்போரை நெகிழச் செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குளத்தின் தன்மை மற்றும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் இந்தப் போட்டியை நடத்தியதே இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த மணிகண்டன் மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

