Skip to content

காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த ஹரீஷ், நாளடைவில் தனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டுள்ளார்.

விசாரணையில், அவரது மனைவி திருமணத்திற்கு முன்பே ஒரு வாலிபரைக் காதலித்ததும், திருமணத்திற்குப் பிறகும் அவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரீஷின் மனைவி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போனார். இதனால் மனமுடைந்த ஹரீஷ், தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த தாவணகெரே புறநகர் போலீசார், ஹரீஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய சோதனையில் ஹரீஷ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “எனது மனைவி காதலனுடன் ஓடிவிட்டதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். என் சாவுக்கு மனைவி, மாமனார், மாமியார் மற்றும் மனைவியின் காதலன் ஆகியோரே காரணம். அவர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, என்னைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது இறுதிச்சடங்குகளை பசவ தர்ம முறைப்படி நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் காதலனுடன் ஓடியதால் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!