கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் அருகே உள்ள சூடாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு 28ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினந்தோறும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று எல்லமேடு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்து, குழந்தைகளுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
பூக்குழி திருவிழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

