Skip to content

கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், கரூர் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சிவசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் சிவசாமி,
“கரூரில் என்டிஏ கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடைபெற்றுள்ளது” என சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், “கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் கூட்டணி பலத்துடன் களம் காண வேண்டும். அதிமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ, அவர்களை வெற்றி பெறச் செய்து, விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதிமுக கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை. தேர்தலைச் சந்திக்க முழுத் தயார் நிலையில் உள்ளோம்”
என்று தெரிவித்தார்.

மேடையில் “விரிசல் இல்லை” என கூறப்பட்டாலும், பாஜக முக்கிய நிர்வாகி அழைக்கப்படாத விவகாரம், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பே இத்தகைய முரண்பாடுகள் எழுவது, கரூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!