அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் ஊராட்சிக்குட்பட்ட மருதையாற்றின் அருகே, பழைய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றியை, ஒரு கும்பல் வேட்டையாட முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறை காவலர் விசுவநாதன் என்பவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வந்த சூழலில், அதில் வேலை செய்த பணியாளர்கள் பொதுப்பணி துறையினர் மூலமாக, வனத்துறைக்கு

காட்டுப்பன்றி பழைய கிணற்றில் விழுந்து கிடப்பதாக, தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரிலேயே விசுவநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
அப்பொழுது அங்கு சில உள்ளூர் நபர்களுடன் இருந்த செல்வகுமார் என்ற நபர், இங்கு எதற்கு வந்தாய்? உனக்கு தகவல் சொல்லியது யார்? காட்டுப்பன்றி எங்களுக்கு தான் வேண்டும் எனக்கூறி, ரோந்து வந்த வனக்காவலர் விசுவநாதனை தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த தாக்குதலை அருகில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுப்பதைப் பார்த்து, நீதான் தகவல் தந்தாயா? எனக்கேட்டு செல்வக்குமார் வீடியோ எடுப்பவரிடம் பேசியபடியே விசுவநாதனை தாக்குவதும், பின்னர் வனக்காவலர் விசுவநாதன் சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்த அரியலூர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன காவலர் விசுவநாதனை மீட்டுள்ளனர். காவல்துறையினர் வருவதை அறிந்த செல்வகுமார் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட செல்வகுமார் என்பவரை பிடித்து, அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீருடையணிந்து பணியில் இருப்பவர் மீது தாக்குதல் நடத்துவது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரியலூர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ரோந்து பணிக்கு சென்ற வனக்காவலர் மீது, தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

