மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைத்ததற்கும், எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் அறிவிப்பிற்கும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன.
விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும். பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதையாக இந்த முடிவை பார்க்கிறோம். இந்த மக்கள் நலத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடுமையாகக் கண்டிக்கிறது. மாநில உரிமைகளையும் மக்களின் நலனையும் புறக்கணிக்கும் இந்த போக்கை ஏற்க முடியாது. சமூக நீதியையும் மனிதநேயத்தையும் உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாகக் காக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

