Skip to content

பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில், மது என நினைத்து பாத்திரம் கழுவும் ரசாயன திரவத்தை அருந்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு இல்ல திருமண விழாவில், பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்துள்ளனர். வேலை முடிந்ததும், அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என்று தவறாகக் கருதி அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே நான்கு பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் பில்வாராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.

தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்திலிருந்து ரசாயன மாதிரிகளைச் சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என்று தெரிந்தாலும், உடற்கூறாய்வு மற்றும் தடய அறிவியல் அறிக்கை வந்த பிறகே முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!