நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டி கைவிடப்பட்ட தங்கச்சுரங்கத்தை இன்றும் மக்கள் சட்டவிரோதமாக தோண்டி தங்கம் எடுத்து வருகிறார்கள். தங்கம் தோண்டும் குழிகளை வனத்துறையினர் நேற்று மூடி டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 150 ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் தங்கச்சுரங்கங்கள் தோண்டப்பட்டன. போதிய வருவாய் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கச்சுரங்கங்கள் கைவிடப்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்த பகுதி மக்களின் தங்கம் மோகம் தீர்ந்தபாடில்லை.
ஆங்காங்கே புதிதாக தங்கச்சுரங்கம் அமைத்து தங்கம் தோண்டுவதாக புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் கூடலூர் ஆர்டிஓ குணசேகரன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய தங்கம் குழிகளை வனத்துறையினர் மூடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட குழிகளை கற்கள் மற்றும் மண்ணை போட்டு மூடினர். சுரங்கம் சார்ந்த வைக்கப்பட்டிருந்த பொருட்களை தீயிட்டு அழித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: பந்தலூர் காட்டிமட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சட்டவிரோத தங்கச்சுரங்கப் பணிகள் நடப்பதாக கிடைத்த புகாரின் பேரில் 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனால், தங்கச்சுரங்க பணிகள் கட்டுப்படுத்தப்பட்டன. இது பெரும்பாலும் வனப்பகுதியில் நடந்தது. ஆனால், தற்போது வெளியான செய்திகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது தனியார் நிலத்தில் தங்கச்சுரங்க பணிகள் நடந்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட வன அலுவலர் மூலம், இந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத தங்கச் சுரங்கப் பணிகள் குறித்து மாவட்ட சட்டம், ஒழுங்கு கூட்டங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட கலெக்டர், இணைந்த ஆய்வை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், வனப்பகுதிகளில் வனத்துறை மூலம் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். அத்துடன் டிரோன் கேமராக்கள் மூலமும் அவ்வப்போது வனப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரவு நேரங்களிலும் அந்நியர் நடமாட்டத்தை கண்காணிக்கும் டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தேவையான நேரத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேலை வாய்ப்பு ஏற்படுத்த கோரிக்கை
பழங்குடியினர் மக்கள், இலங்கையில் இருந்து மறுவாழ்வு திட்டத்தின் மூலம் இப்பகுதியில் ஒன்றிய, மாநில அரசால் குடியமர்த்தப்பட்டுள்ள தாயகம் திரும்பிய மக்கள், உள்ளூர் மக்கள் என ஆங்கிலேயர்கள் அமைத்த இந்த தங்க சுரங்கங்களில் தங்க படிமங்களை சேகரித்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இது பல நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் தங்க படிமங்களை சேகரிக்கும் தொழிலாளர்கள் வனப்பகுதியில் சிறு சிறு குழிகள் தோண்டி தங்க படிமங்களை சேகரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட துவங்கினர்.
இதனை வனத்துறையினர் மூடிவிட்டனர். இதனால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

