திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கி வந்தவர். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாகக் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் (பின்னர் 2024-ல் மீண்டும் சேர்க்கப்பட்டார்). இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதனையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து அவரைப் போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

