திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகன் சுருளி (45), கடந்த சில நாட்களாகப் பெற்றோரிடம் சொத்து கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சுருளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது தந்தை மற்றும் தாயை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி உயிரிழந்தார். தாய் மீனாட்சிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெற்றோரை வெட்டிவிட்டுத் தப்பியோடிய சுருளியைப் போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

