சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியில், அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன். இருவரும் பேசி் சுமூக தீர்வு காண்பார்கள். காங்கிரசில் சிலர் கூறும் சொந்த கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. விசிக ஆட்சி அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் கைவிடவும் இல்லை. ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நம்புகிறார்கள். கூட்டணிகளில் சலசலப்பை ஏற்படுத்தி வலதுசாரிகளுக்கு வாய்ப்பு விடக்கூடாது.
ஒவ்வொரு கட்சிக்கும் நோக்கம் இருக்கிறது. கோரிக்கை வைப்பது இயல்பானது. விசிக தொடங்கப்பட்டதிலிருந்து ஆட்சி அதிகாரம் என்பது எங்களது கோரிக்கை. ஆனால் அதற்கான காலம் இப்போது கனியவில்லை. இப்போது அழுத்தி கேட்டால், அது தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் வலதுசாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். இருந்தாலும் அதில் நாங்கள் பின்வாங்கவும் இல்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் தற்போது இல்லை என நினைக்கிறோம். வலதுசாரி கட்சிகள் மேலோங்கும் நேரத்தில் ஆட்சியில் பங்கு கேட்டால் கூட்டணி பலவீனமடையும். தமிழ்நாடு காங்கிரஸை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் காங்கிரஸ் தேசிய தலைமை முடிவு செய்யும்” என்றார்.

