03.08.2026:திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) திருவனந்தபுரம் சி–டிஏசி நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது.
அடுத்த தலைமுறைக்கான சைபர் தடயவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் எனும் திறன் மேம்பாடு நிகழ்ச்சியை மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியது: நீதி, போலீஸ் துறையில் குற்றங்களை தடுப்பது முக்கிய பணியாக உள்ளது. வழக்கமான மற்றும் டிஜிட்டல் விசாரணையில் தடயவியல் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தரவு துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் காரணமாக பொருள் உள்ளிட்ட பல்வேறு இழப்புகள் ஏற்படுகிறது. பொதுமக்களிடம் தடயவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். சைபர் குற்றங்களை தடுப்பது, சைபர் தடயவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆசிரியரகள், ஆராய்ச்சியாளர்களின் பங்கு மகத்தானது என்றார். நிகழ்ச்சியில் டீன் ஜெயபால், சி, டிஏசி விஞ்ஞாணி வினயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சிவக்குமரன் வரவேற்றார். ஆக. 7ம் தேதி வரை நடக்கும் கருத்தரங்கில் என்ஐடி, சி–டிஏசி மைய பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி வழங்குகின்றனர். சைபர் குற்றங்கள் குறித்த பல்வேறு தகவல்கள், ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப மேம்பாடு குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.
படவிளக்கம்:
திருச்சி என்ஐடியில் நேற்று தொடங்கிய பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியை மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அருகில் டீன் ஜெயபால், பேராசிரியர் சிவக்குமரன்.
