இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை பிறை பார்த்து பின்பற்றப்பட்டு வருகிறது. முதலில் ரமலான் மாதத்துக்கான பிறை தெரிந்தவுடன் ரமலான் நோன்பு தொடங்கும்.
அதன்படி நேற்று சவுதி அரேபியாவில் ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் பிறை தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் ரமலான் மாதத்துக்கான பிறை இன்று மாலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தெரிந்தது. இதையடுத்து ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும். இன்று (புதன்கிழமை. 18-02-2026) மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை 19-02-2022) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என் பி உஸ்மான் முஹியித்தின் பாகவி மழஹிரி காஸிமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்றிரவு முதல் பள்ளி வாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளுமு, அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களது கனிவான ரமலான் முபாரக் நல்வாழ்த்துகள்” என கூறப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்க உள்ளனர்.

