Skip to content

கேப்டன் விஜயகாந்த் விரும்பிய கூட்டணி… பிரேமலதா ஸ்பீச்

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் வட்டாரங்களில் கூட்டணி பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, இந்த முறை எந்த அணியுடன் இணையப் போகிறது என்பது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன. தேமுதிக திமுகவுடன் சேருமா அல்லது மீண்டும் அதிமுகவுடனேயே தொடருமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் பரவலாக பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இன்று (பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தேமுதிக முதல் முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை உறுதி செய்கிறோம். எங்களுடைய கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் திமுகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்பினர். அவர்களின் எண்ணத்தை மதித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “கேப்டன் இல்லாத நேரத்தில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டிலேயே இந்த கூட்டணி அமைய வேண்டியது. அப்போது கலைஞர் அவர்கள் ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்று கூறியிருந்தார். ஆனால் அது அப்போது நடக்கவில்லை,” என்று நினைவுகூர்ந்தார்.

“கேப்டன் விஜயகாந்த் விரும்பிய இந்த கூட்டணி 10 ஆண்டுகள் கழித்து தாமதமாகினாலும் தற்போது உறுதியாகியுள்ளது. கலைஞர் கூறிய ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்ற சொல் இப்போது நனவாகியுள்ளது,” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!