அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்க கோரிக்கை நிலத்தடி நீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு.
கரூர் மாவட்ட நிலத்தடி நீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், அமராவதி ஆறு கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு ஆதாரமாகவும் விளங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் முற்றிலும் வறண்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 20 நாட்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குக் கூட போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமராவதி அணையில் 56 கன அடி அளவுக்கு தண்ணீர் இருப்பதாகவும், எனவே பழைய ஆயக்கட்டு மூலம் கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதுடன், அமராவதி ஆற்றில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
