Skip to content

கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்க – தவெக தலைவர் விஜய்!

சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை (ED) வழங்கிய ஆதாரங்கள் போதுமான அளவிற்கு உள்ளதால், முதல் கட்ட விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நகராட்சி துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு ரூ.1,020 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அமலாக்கத்துறை ஏற்கனவே இந்த ஊழல் குறித்து ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தது. ஆனால் திமுக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் இதை “துடைக்க முடியாத அவமானம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் தனது பதிவில், “கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே வழக்கு தொடுக்க சொன்னது. ஆனால் ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர், “2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காக தகிடுதத்தங்களையும் தாராளமாக செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியை உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது” என்று கூறியுள்ளார். அமைச்சர் ராஜினாமா செய்யாவிட்டால் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக, இந்த நீதிமன்ற உத்தரவு திமுக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடரும் நிலையில், அரசியல் குற்றச்சாட்டுகள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய்யின் கடுமையான பதிவு இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. 2026 தேர்தலுக்கு முன்பு இந்த ஊழல் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

error: Content is protected !!