அரியலூர் மாவட்டத்தின் இவ்வாண்டின் முதல் ஜல்லிகட்டு, பூண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 750க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதுபோன்று பல மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் காளையர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் அடக்கினர். பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் 1000 ரூபாய் முதல் 10,000 வரை ரொக்க பணம், ட்ரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கட்டில், சைக்கிள், சில்வர் குவளை, கிடா ஆடு, ஒரு பவுன் நகை, மாட்டை அடங்கினால் மாடு இலவசம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியின் போது 20 க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு, பூண்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாலும், அரியலூர் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதாலும், மாவட்ட முழுவதும் உள்ள பொதுமக்கள் போட்டியை பார்ப்பதற்கு ஆர்வமுடன் வந்திருந்தனர்.

