2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் ஏடன் மார்க்ராம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சூர்யகுமார் யாதவும் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் செய்திருப்பேன் என்றார்.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது ஓவரிலேயே குவின்டன் டி காக்கை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் ஏடன் மார்க்ராமையும், பும்ரா ரயான் ரிக்கெல்டனையும் ஆட்டமிழக்கச் செய்தனர். தென்னாப்பிரிக்கா 20/3 என்ற நிலையில் தடுமாறியது.ஆனால் டேவிட் மில்லரும் டிவால்ட் பிரெவிஸும் இணைந்து 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து அணியை மீட்டெடுத்தனர். மில்லர் அதிரடியாகவும், பிரெவிஸ் பொறுமையாகவும் ஆடினர். ஷிவம் துபே பிரெவிஸை 45 ரன்களில் வீழ்த்தினார்.
மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி தென்னாப்பிரிக்காவை 187/7 என்ற நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.இந்திய பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய பேட்டிங் பலவீனமாக அமைந்தது.
பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் 180-185 ரன்கள் சேஸ் செய்வது கடினமானதாக மாறியது.ஆட்டத்திற்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஆட்டத்தின் ஆரம்பத்தில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். 21/3 என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால் 7 முதல் 15 ஓவர்கள் வரை அவர்கள் சிறப்பாக ஆடினர். பின்னர் நாங்கள் மீண்டும் வந்தோம். ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, ஆனால் பேட்டிங் சிறப்பாக இல்லை” என்றார்.
சூர்யகுமார் மேலும் கூறுகையில், “சில சமயம் 180-185 ரன்களை சேஸ் செய்யும்போது பவர்பிளேயில் வெற்றி பெற முடியாது, ஆனால் தோல்வியடையலாம். நாங்கள் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். சிறிய சிறிய பார்ட்னர்ஷிப்கள் தேவைப்பட்டது. இது டீம் ஸ்போர்ட். கடந்த ஆண்டு அபிஷேக் நம்மை கவர் செய்தார், இப்போது நாங்கள் அவரை கவர் செய்வோம்” என்று அணியின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
இந்த தோல்வியால் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. அடுத்த போட்டிகளில் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் “நாங்கள் கற்றுக்கொண்டு வலுவாக திரும்புவோம்” என்று உறுதியளித்தார். இந்த தோல்வி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அணி அடுத்த போட்டிகளில் திருப்புமுனை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

