திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என மாவட்டம் முழுவதும் 46 நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் 7,000 செக் மோசடி வழக்குகள் உள்பட 60,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையிலான மக்கள் நீதிமன்றம் மார்ச் 14 ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றம் குறித்து வழக்காடிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, வழக்குகளை விரைந்து முடிக்க திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நீதிமன்றம் என்பது நிலுவையில் வழக்குகளை இருதரப்பினரும் தங்களுக்குள் சுமூகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள 2 மாதத்துக்கு ஒரு முறை வீதம் ஆண்டுக்கு 5 முறை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு மார்ச், மே, செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளது. திருச்சியில் வரும் மார்ச் 14ம் தேதி (சனிக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. நிலுவையில் உள்ள அனைத்து உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் (விவகாரத்துத் தவிர), செக் மோசடி வழக்குகள், மன்னிக்கக்கூடிய சிறிய அளவிலான குற்றவழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படும்.
இருதரப்பினரையும் அழைத்து நீதிபதிகள் தலைமையில் மத்தியஸ்தர் மூலம் பேசி சமரசத் தீர்வு கண்டு, பரிகாரத்தையும் தாண்டி சட்டத்துக்குட்பட்டு அவர்களுக்கு இடையே உள்ள உண்மையான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.
மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டப்பிறகு மேல்முறையீடு கிடையாது. இதில் வெற்றி தோல்வி கிடையாது. இருவரும் வெற்றியாளர்கள் தான். மக்கள் நீதிமன்றம் என்பது சிறந்த அமைப்பாக இந்தியா முழுவதும் செயல்படுகிறது.
திருச்சியை பொறுத்தவரை 14 அமர்வுகள் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்துக்கு முன்பாக இருதரப்பினரும் அமர்ந்து பேசி நீதிபதி முன்பு தீர்வு காணும் முன்அமர்வு நிகழ்வுகள் கடந்த பிப்.23ந் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் 20 வழக்குகளுக்கு பரிகாரம் காணப்பட்டுள்ளது. மார்ச் 13ந்தேதி வரையும் இந்த முன்அமர்வுகள் நடைபெற உள்ளன.
திருச்சி மாவட்ட வழக்காடிகள் இதை பயன்படுத்திக் கொண்டு வழக்குகளை விரைந்து முடித்து பயன்பெறலாம்.
மக்கள் நீதிமன்றத்தில் சமரசத்தீர்வு எட்டும்போது காலவிரையம், பணம் விரையம் கிடையாது. நீதிமன்றத்துக்கும், வழக்கறிஞர் அலுவலகத்துக்கும் அலையும் நேரம், பணம் மிச்சமாகும். நீதிமன்றத்தில் செலவிடும் நேரத்தை தங்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்துவதால் மன அமைதி, நிம்மதி கிடைப்பதோடு, அவர்களது பொருளாதாரம் மேம்படும்.
.மக்கள் நீதிமன்றங்கள் மூலம் அதிகளவு வழக்குகளுக்கு தீர்வு கண்ட மாவட்டங்கள் பட்டியில் திருச்சி மாவட்டம் 2வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.57 கோடி மதிப்பிலான 4,851 வழக்குகளுக்கு தீர்வு கண்டு 3வது இடம் பெற்று, டிசம்பர் மாதம் ரூ.52 கோடி மதிப்பிலான 5,119 வழக்குகளுக்கு தீர்வு காண்டு 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
வழக்கறிஞர் சங்க நீதிமன்றக் கட்டணங்கள் முழுமையாக திரும்பிப்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பி.கணேசன், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி.முல்லை சுரேஷ் ஆகியோர் கூறியது:
திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி வழக்கறிஞர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி மக்கள் நீதிமன்றங்கள் சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். வழக்கறிஞர்கள் சங்கங்களை அழைத்துப்பேசினார். இதனால் அதிகளவு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆயினும் கிராமத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் நீதிமன்றம் ஒன்று இருப்பதே தெரியவில்லை. எனவே வரக்கூடிய மக்கள் நீதிமன்றம் மற்றும் முன் அமர்வுகளில் பங்கேற்று வழக்காடிகள் பயனடைய வேண்டும்’ என்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஏ.பிரபு, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சி.முத்துமாரி, குற்றவியல் சங்க துணைத்தலைவர் எஸ்.சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

