Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, தை பிறந்தான் கடற்கரைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராக்டரில் மூட்டைகளுடன் வந்துகொண்டிருந்தனர். போலீசார் மறிக்கவே, டிராக்டரில் இருந்தவர்கள் கீழே குதித்து அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் டிராக்டரை சோதனை செய்ததில் 10க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்தன.

அதில், போதைப் பொருள்களுடன் சேர்க்க பயன்படுத்தப்படும் பீடி இலைகள் மற்றும் பீடிகள் இருந்தது தெரிய வந்தது. இவை அனைத்தும் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து டிராக்டருடன் கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்து, புதுமடம் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு மூட்டைகளை பிரித்து பார்த்ததில் ஒரு டன் பீடி இலைகள் மற்றும் பீடிகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!