Skip to content

மதவெறி அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.. தொண்டர்களுக்கு கடிதம்

ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம். மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திமுக என்றாலே குடும்பம்தானே! நம் உயிர்மூச்சான திமுக என்ற இயக்கத்தின் வளர்ச்சி, அதன் ஆட்சிக்கால திட்டங்களால் தமிழ்நாட்டின் முன்னேற்றம், தமிழர்கள் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய உயர்வு இவை பற்றி சிந்தித்து, அதற்காக என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருப்பவன். என்னைப் போலவே, திமுக உடன்பிறப்புகளையும் உழைக்கச் செய்பவன். உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம்.

அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூடுகிறோம். திமுக என்கிற கொள்கைக் குடும்பத்தின் தலைவனாக இருக்கிற எனக்கு, கிளைக்கழகங்கள் வரையிலான நிர்வாகிகளை மாநாட்டிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்க வேண்டிய கடமை இருக்கிறது. கடந்த பிப்ரவரி 26ம் நாள், மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளேன்.

அன்பு உடன்பிறப்பே தீரர்கள் கோட்டமாம் திருச்சியில், வருகின்ற மார்ச் 9ம் நாளன்று பத்து லட்சம் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் உங்களை எல்லாம் காண்பதற்கு ஆவலாய் உள்ளேன். திருச்சியில் மாநாடு என்றாலே திமுக வரலாற்றில் திருப்புமுனைதான். திமுக மாநாடு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேருதான். இப்போதும் மாநாட்டுப் பணிகளை மிகச் சிறப்பாக அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளைக் கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, லட்சிய நோக்கத்துடன் பயணிக்கின்ற வாய்ப்பு, உங்களால் திமுகவின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டவனான உங்களில் ஒருவனான எனக்கு கிடைத்திருக்கிறது. கலைஞருக்கு கூட காலம் இந்த வாய்ப்பை வழங்காத நிலையில், அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்,

2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம். அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள்.

நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.

மதவெறி அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.

உடன்பிறப்புகளாம் உங்களின் கடுமையான உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவினாலும் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, 2021ம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்த திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களாலும், அதனால் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் அடைந்துள்ள பலன்களினாலும், நான் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்க முடிகிறது.

மார்ச் 9ம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரிலான திமுக நிர்வாகிகள் சந்திப்பு பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிற திருச்சி சிறுகனூரில்தான், 5 ஆண்டுகளுக்கு முன் 2021ம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடந்தது. அப்போது உடன்பிறப்புகளான உங்களிடமும் பொதுமக்களிடமும் நான் வைத்த கோரிக்கை, ‘திமுகவிற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பை தாருங்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’ என்பதுதான். திமுக உடன்பிறப்புளான உங்களின் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டை மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறது.

தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும். தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம். திருச்சிக்கு திரண்டு வா உடன்பிறப்பே! உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!