கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்: ஒரு காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை.
கரூர், வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளது கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள்

மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், கடந்த சில நாட்களாக வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
அறநிலையத்துறை உதவி ஆணையர் கணபதி முருகன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலுக்குச் சொந்தமான காலி நிலத்தில், “இவ்விடம் கோவிலுக்குச் சொந்தமானது; அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அறிவிப்புப் பலகையை நட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 47 வீடுகள் மற்றும் 2 கடைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்றனர். அங்கிருந்த பொதுமக்களிடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு கடிதம் வழங்கி கோவில் ஒப்பந்ததாரராக மாற வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றம் அனுமதி கடிதம் இருந்தால் அதனை காட்ட வேண்டும் எனக் கூறி கால அவகாசம் வழங்கினர்.

