கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி வெள்ளைய நாயக்கர் களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் 65. விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இவரது மனைவி கோவிலுக்கு சென்ற நிலையில் இவரது மருமகள் மாமனாருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவின் சாவியை தேடி எடுத்து 2 பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள், 5 ஜோடி வெள்ளி

கொலுசுகள் மற்றும் 2 ஆயிரம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
உணவு அருந்திய பின்னர் வீட்டில் உள்ள தனது கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்க்காக வீட்டிற்கு வந்த முருகேசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

