கரூர் மாவட்டம், புன்னசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் (அன்னை) தனியார் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்துகள், மாலை கல்லூரி முடிந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் புறப்பட்டன.
கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவைத் தாண்டி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்காக மேம்பால சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற பேருந்து, சாலையில் இருந்த ஒரு வேகத்தடைக்காக திடீரென பிரேக் பிடித்துள்ளது.
இதை சற்றும் எதிர்பாராமல் பின்னால் வந்த அதே கல்லூரியின் மற்றொரு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதியது.
இந்தத் விபத்தில் பேருந்தின் உள்ளே இருந்த 13 மாணவிகள் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரிசெய்தனர். ஒரே கல்லூரியைச் சேர்ந்த பேருந்துகள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

