திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது:-
தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் கூட்டணியில் சேர்வாரா அல்லது தனியாக போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் எந்த கூட்டணியில் சேர்கிறார், தனியாக நிற்கிறாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. அதைப் பற்றி முழுமையாக தெரியாமல் கருத்து சொல்ல முடியாது. தற்போது அவர் எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருப்பதாக தான் தெரிகிறது” என்றார்.
மேலும் திமுக–காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “எந்த மாற்றமும் வர வாய்ப்பு இல்லை. திமுக–காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வரும் நிலையில் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என கூறப்படும் நிலையில் கோவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டபோது, “இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுகின்றன. இப்படியான சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. காவல்துறை விரைவாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில சம்பவங்களை வைத்து மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது” என்றார்.
தாம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “அறந்தாங்கி தொகுதியில் தற்போது எனது மகன் ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அவரையே வேட்பாளராக பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. எம்எல்ஏ அல்லது அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. முன்பு எம்ஜிஆர் தலைமையிலான அரசிலும், பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும் அமைச்சராக இருந்துள்ளேன். எனவே மீண்டும் அமைச்சர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி) ஆக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் உள்ளது” என தெரிவித்தார்.
பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பெனட் அந்தோணி ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

