தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் ஜோசப் விஜய் நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் கலை கல்லூரியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் முடிந்து 12.25க்கு வெளியே வந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு நேராக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்று பிரசாரம் நடைபெறும் என கூறியிருந்தனர். ஆனால், வேட்பு மனுவை தாக்கல் செய்து வெளியே வந்தவுடன் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அம்பேத்கர் கல்லூரி சாலை முதல் எம்கேபி நகர் கொடுங்கையூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்சும் சிக்கியது. கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், முன்கூட்டியே 1.05 மணியளவில் விஜய் தனது பிரசாரத்தை தொடங்கினார். 1.05 மணியளவில் பேச ஆரம்பித்த விஜய் 1.20 தனது பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொளத்தூருக்கு கிளம்பினார். விஜய் பெரம்பூரில் இருந்து கிளம்பிவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொளத்தூரில் குவிய தொடங்கினர்.
ஆனால் 1.20 மணியளவில் பெரம்பூரில் இருந்து கிளம்பிய விஜய் மாலை 3.40 மணியளவில் கொளத்தூர் அகரம் சந்திப்பிற்கு சென்றார். பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு ஊர்வலமாக தனது பிரசார வாகனத்தில் ரோடு ஷோ நடத்திக் கொண்டே சென்றார். கொளத்தூரில் மாலை 3.40 மணியளைவில் பேச்சை தொடங்கிய விஜய், ‘அனைவருக்கும் வணக்கம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரபு அவர்களுக்கு வாக்களியுங்கள்’. பிரபு அவர்கள் வேறு நான் வேறு இல்லை நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் நன்றி என பேசி முடித்தார். வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதுவும் கொளத்தூர் வேட்பாளர் வி.எஸ்.பாபு பெயருக்கு பதிலாக பிரபு என்று தவறுதலாக மாற்றி கூறிவிட்டு அங்கிருந்து வில்லிவாக்கம் சென்றார்.

