தஞ்சாவூர் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோடியம்மன் கோவிலின் பச்சைக்காளி பவளக்காளி உறவாடும் வைபவம் இன்று அதிகாலை பக்தர்கள் சூழ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
சோழ மன்னரான விஜயாலய சோழன் காலத்தில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் எழுப்பப்பட்ட கோடியம்மன் கோவில் நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களாலும் போற்றி பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட பச்சைக்காளி பவளக்காளி உற்சவத்திற்காகக் கடந்த மாதம் 17-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக கோடியம்மன் கோவிலில் இருந்து பச்சைக்காளி மற்றும் பவளக்காளி உருவங்கள் மேலராஜவீதிக்குக் கொண்டு வரப்பட்டன. மூன்று நாட்கள் நடைபெறும் வீதியுலா நிகழ்வின் ஒரு பகுதியாக மேலராஜவீதியில் உள்ள சங்கரநாராயணன் கோவிலில் இருந்து பச்சைகாளியும் கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்து பவளக்காளியும் தனித்தனியாகப் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பச்சைக்காளி பவளக்காளி உறவாடும் வைபவம் இன்று அதிகாலை பக்தர்கள் சூழ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. திருநீறு நிரப்பப்பட்ட கபாலங்களை ஏந்தியபடி காளி உருவங்களைத் தூக்கி வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

