தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தான் அதிக முறை வந்த மாவட்டம் கோவைதான் என்றும், கொரோனா காலத்தில் பி.பி.இ (PPE) கிட் அணிந்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த நினைவுகளுடன் கோவையைத் தனது சொந்த ஊராகவே கருதுவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில்பாலாஜியை ‘செயல்வீரர்’ எனப் புகழ்ந்த முதலமைச்சர், கோவை வடக்கு, சூலூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட 8 தொகுதி திமுக வேட்பாளர்களையும், காங்கிரஸ் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தனது உரையில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வை கடுமையாகச் சாடிய முதலமைச்சர், கடந்த ஐந்தாண்டு காலத்தில் கோவைக்குச் செய்த செம்மொழிப் பூங்கா, ஜி.டி. நாயுடு மேம்பாலம், பில்லூர் 3-ஆம் குடிநீர்த் திட்டம் மற்றும் எல்காட் தகவல் தொழில்நுட்ப மையம் போன்ற திட்டங்களைப் பட்டியலிட்டார். குறிப்பாக, 300 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள “பெரியார் அறிவுலகத்தை”, தேர்தல் முடிந்து மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நிகழ்வாகத் திறந்து வைப்பேன் என உறுதி அளித்தார். பா.ஜ.க தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சிப்பதாகவும், பீகாரில் தமிழர்களைப் பற்றித் தவறாகப் பேசிய பிரதமர் மோடி, இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்க வருகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மக்கள் தொகையைக் காரணம் காட்டி கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை பா.ஜ.க முடக்குவது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அவர் குற்றம் சாட்டினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை ‘தேர்தல் களத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்ட முதலமைச்சர், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். விவசாயிகளுக்கு மீட்டர்கள் இல்லாத நவீன இலவச மின்சாரப் பம்பு செட்டுகள், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை, 8-ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார்.
“நாங்கள் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்; கலைஞரின் மகனான நான் கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்று சூளுரைத்த முதலமைச்சர், கோவை மக்கள் 10 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

