தர்மபுரி மாவட்டம், பீடம்நேரி, பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23). இவர் கோவை பேரூர் தெலுங்குபாளையத்தில் உள்ள சேரன் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்ம்-டி (Pharm-D) படித்து வந்தார். கல்லூரியின் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கி பயின்று வந்த இவர், நேற்று இரவு தனது நண்பர்களான அபி, மகேந்திரன் உட்பட 8 பேருடன் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்காகச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இவர்கள் ஐந்தாவது மலையில் ஏறிக்கொண்டிருந்த போது, முகேஷ் குமாருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அவர் மலையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த டோலி தூக்கும் நபர்களின் உதவியுடன் மாணவனின் உடல் தற்போது மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புனிதப் பயணமாக மலை ஏறிய மாணவர் பாதியிலேயே உயிரிழந்தது அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

