அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோலாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் ஹெலிகாப்டரில் அங்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், கோலாகஞ்ச் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் ஹெலிகாப்டரை தரையிறக்க முடியாத சூழல் உருவானது. பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் மீண்டும் திரும்பியதால், அங்கு திட்டமிடப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்டம் ரத்தானது. ,இதனால் ஏமாற்றமடைந்த தொண்டர்களிடையே செல்போன் வாயிலாக அமித்ஷா பேசினார். அப்போது அவர், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு என்னால் நேரில் வர முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சி அசாம் மாநிலத்தை மற்றவர்களிடம் சரணடையச் செய்தது. ஆனால் பாஜக அரசு நிலப்பாதுகாப்பை உறுதி செய்யும். எனவே, பாஜக வேட்பாளர் அஸ்வினி ராய் சர்க்காருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து, அமித்ஷா துத்னோய் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.

