Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏப்.14ம் தேதி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. முதல்நாள் விழாவான ஏப்.6ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் காப்பு கட்டுதல் வைபவம் நடைபெறும். நண்பகல் 12 மணக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். காப்புகட்டுதல் வைபவத்தின்து, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தர்கள் திரளாக வந்து கோயிலில் காப்பு கட்டி விரதம் தொடங்குவர்.
ஏப். 7ஆம் ந்தேதி முதல் 13ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும், 13ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான ஏப்.14ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும். காலை 10.31 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து, தேரடி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பத்தாம் திருவிழாவான ஏப்.15ஆம் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. ஏப்.16ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் க. அருட்செல்வன், செயல் அலுவலர் கி. உமா மற்றும் கோயில் பணியாளர்கள், ஊர்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!