தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரண்டு நகரங்களில் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தினமும் பல தொகுதிகளில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்தவகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி குமரி மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. அதாவது அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டமேடை அமைக்கும் பணிகளை தீவிரமாக த.வெ.க.வினர் மேற்கொண்டனர்.
ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுக்கூட்டம் நடத்தப்படும் நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. அதே சமயத்தில் மதியத்துக்கு பிறகு ரோடுஷோவில் விஜய் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட உபகரணங்கள். பந்தல் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
பொதுக் கூட்டத்திற்கு மாற்றாக விஜய் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் வரை பைபாஸ் ரோட்டில் ரோடுஷோ செல்கிறார். அப்போது அவர் உரையாற்றவும் உள்ளார். இதற்காக அனுமதி கோரி த.வெ.க. நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் மனு அளித்தனர். அதற்கு அவர் அனுமதி அளித்தார்.
அதாவது மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகிறார். கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் தொகுதி த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கிறார். குமரியில் திட்டமிட்டப்படி பிரசாரம் நடக்கும் என்பதை அறிந்ததால் த.வெ.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் விஜய் வருகையால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரள்வார்கள் என்பதால் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
