தொகுதி மறுவரையறை மேற்கொள்ள ஒன்றிய அரசு அவசரம் காட்டுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்து உள்ளார். தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநில தேர்தல்கள் முடியும் வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தாமல் ஒத்தி வைப்பதால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது என்றும் சோனியா கடுமையாக சாடி உள்ளார்.
மக்களவையின் பலத்தை அதிகரிக்கும் வகையிலான எந்தவொரு தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது வெறும் கணக்கீட்டு ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் சமச்சீராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசை சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள சிறப்பு தொடரின் போது, நாடு முழுவதும் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக உயர்த்துவதற்கும், அதில் 273 இடங்களை அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும் வழிவகை செய்யும் ஒரு வரைவுத் திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சோனியா காந்தி, நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகளை மீண்டும் வரையறை செய்யும் செயல்முறையானது சிறிய மாநிலங்களையும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முன்னோடிகளாகத் திகழும் மாநிலங்களையும் எந்த வகையிலும் பாதகமான நிலைக்குத் தள்ளிவிட கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டது போலவே, எந்தவொரு தொகுதி மறுவரையறைக்கும் முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா தந்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான கணக்கெடுப்பும் ஒரு பகுதியாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற சாதிவாரிக் கணக்கெடுப்புகள் ஆறு மாதங்களுக்குள் நிறைவுற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பானது 2027-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடுவதைத் தாமதப்படுத்தும் என்று பரப்பப்படும் பிரச்சாரம் முற்றிலும் உண்மையல்ல. உண்மையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேலும் தாமதப்படுத்தி, அதனை முறியடிப்பதே பிரதமரின் உண்மையான நோக்கமாக இருக்கிறது என்று சாடி உள்ளார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு இங்கு பிரச்சினை அல்ல இது ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்று. உண்மையான பிரச்சனை தொகுதி வரையறைதான். அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளிவந்துள்ள தகவல்களின்படி, அது மிகவும் ஆபத்தானது மற்றும் அரசியலமைப்பின் மீதான ஒரு தாக்குதலாக இருக்கலாம் என்று சோனியா கூறி இருக்கிறார்.
