Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூர்
பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா(25) வாக்குபதிவை பார்வையிட சென்றபோது, அங்கிருந்த திமுகவினர் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ்பாத்திமா நேற்று மாலை அம்மாபேட்டை அருகே உக்கடை என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றதை பார்வையிட சென்றார். அப்போது அங்கு வாக்குப்பதிவு மையத்தில் இருந்த திமுகவினர் இவரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கீழே தள்ளிவிட்டுள்ளனர். கர்ப்பிணியான இவர் மயக்கமடைந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வேட்பாளரின் கணவர் ஷேக் அம்சத்அலி கூறியது: பாபநாசம் தொகுதியின் நாதக வேட்பாளர் என்ற முறையில் தொகுதி முழுவதும் வாக்குப்பதிவை பார்வையிட்டு வந்தோம். அப்போது உக்கடையில் உள்ள வாக்குப்பதிவை பார்வையிட்ட போது, அப்போது அங்கு திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சின்னமான ஏணி சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்து கொண்டு வாக்குப் பதிவு மையத்தில் சிலர் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கிருந்த போலீஸாரிடம், எங்களை மட்டும் ஏன் துண்டு அணிந்து வரக்கூடாது என கூறினீர்கள், ஆனால் இங்குள்ள திமுகவினர் பேட்ஜ் அணிந்துள்ளார்கள் என கேட்டபோது, அந்த நேரத்தில் திமுகவினர் எங்களை தரக்குறைவாக பேசினர். அப்போது போலீஸார் தலையிட்டு இது தொடர்பாக புகார் ஏதும் கொடுப்பதாக இருந்தால் புகார் மனு எழுதி தாருங்கள் என கூறினர். அப்போது நாங்கள் புகார் மனு எழுத முயன்றபோது அங்கிருந்த திமுகவினர் மற்றும் திமுகவின் ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில் ஏராளமானோர் எனது மனைவியை கீழே தள்ளிவிட்டு, செங்கல்லால் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த எனது மனைவி மயக்கமடைந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். ஸ்கேன் செய்த பின்னர் தான் உடல் நலம் குறித்து தெரியவரும். மருத்துவர்கள் 48 மணி நேரம் கழித்து தான் கூற முடியும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என்றார்.

error: Content is protected !!