தஞ்சை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் பொறிக்கப்பட்டுள்ளது தஞ்சாவூரைச் சேர்ந்த நாணயவியல்
தமிழகத்தில் பல திருக்கோயில்களில் உள்ள தேர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவாரூர் கோயில், நெல்லையப்பர் கோயில், அண்ணாமலையார் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் ஆகியவற்றின் திருத்தேர்கள் மிகப் பெரிய அளவிலும், நுணுக்கங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன.
மன்னர்கள் வலம் வருவதற்கும், போர் மேற்கொள்வதற்கும் பல வகையான தேர்கள் வகுத்திருந்த போதும், கோயில்களில் தெய்வத்திருமேனிகள் பவனி வர செய்யப்பட்ட தேர்கள் அளவிலும், வடிவமைப்பிலும் மாறுபட்டவை. தமிழகத் தேர்கள் எல்லாம் திராவிட பாணி அமைப்பில்தான் இருக்கும்.
திருத்தேர்கள் பற்றிக் கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியங்களைத் தவிர, காசுகளிலும் தேர் உருவம் பொறித்து மன்னர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தக் காசுகள் அனைத்தும் கோயில் தேர்த் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் திருவிழா அன்று வெளியிடப்பட்டிருக்கலாம்.
பெரும்பாலும் விஜய நகர ஆட்சியின் கீழ் நாயக்க மன்னர்கள் அதிகமாக திருத்தேர் வடிவங்களைப் பல வகையான காசுகளில் பொறித்து வெளியிட்டுள்ளனர். மேலும், சோழ மண்டலத்தில் கிடைத்துள்ள தேர் உருவம் பொறித்த இரு வகையான காசுகள் உள்ளன.
தஞ்சாவூரில் கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு வகை காசுகளிலும் உள்ள தேர் உருவங்கள் தஞ்சை நாயக்கர் காலத்தைச் சார்ந்தவை. இந்த இரு காசுகளும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தேர் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர்களாகக் கருதப்படுகிறது. ஒரு காசில் முன் பக்கத்தில் வலது பக்கம் நோக்கி அமர்ந்திருக்கும் காளை உருவம் உள்ளது. காளையின் மேல் சூரியன், சந்திரன் உருவம் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் தேர் உள்ளது. செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட இந்தக் காசின் எடை 2.3 கிராம்.
மற்றொரு காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்துள்ளார்; பின் பக்கத்தில் தேர் காணப்படுகிறது. இதுவும் செம்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 0.64 கிராம் ஆக உள்ளது.
