சிவகாசியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்த கும்பலை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் கிராமத்தின் கிழக்கு த் தெருவைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரது மகன் மாரிச்செல்வம் (வயது 18). கூலி வேலைக்குச் சென்று வரும் இளைஞர் மாரிச்செல்வத்தை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று கொங்கலாபுரம் ஜக்கம்மாள் காலனி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வைத்து அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத்தப்பி யோடியது . இதில் சம்பவ இடத்திலேயே மாரிச்செல்வம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார்கள் கொலை செய்யப்பட்ட மாரிச்செல்வத்தின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு க்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்க முயன்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க பின்பக்க கண்ணாடியை உடைத்ததோடு, தடுத்து நிறுத்திய மாரிச் செல்வத்தின் உறவினர்களும், நண்பர்களும் கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சிவகாசி- வெம்பக்கோட்டை சாலை சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையிலமர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல்சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான வாகனங்கள் வேறு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா போராட்டம் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை யடுத்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை விடுவித்ததுடன், அனைத்து வாகனங்களையும் சென்று வரவழி வகை செய்தனர். இதற்கிடையே மர்ம கும்பல் ஒன்று சாத்தூரிலிருந்து வெம்பக்கோட்டை மார்க்கமாக சிவகாசிக்கு வந்த அரசு பேருந்தின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது.
வாலிபர் மாரிச்செல்வம் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி நகர்க் காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போலீஸ் டிஎஸ்பி அணில் குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சரஸ்வதி பாளையத்தைச் சார்ந்த மதிசங்கர்( வயது 20), வெங்கடேஷ்( வயது 19), மாதவன்( வயது 19) அய்யனார் காலனியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன்( வயது 20), முத்துப்பாண்டி( வயது 20 ), மீனம்பட்டி சூர்யா( வயது 19) ஆகிய ஆறு பேர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி, கொலையாளிகள் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களையும், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், கத்தி போன்ற 3- ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் சித்துராஜபுரம், அய்யனார்காலனி, சரஸ்வதிபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளம் வயதினர்கள் பலரும் சினிமா படப் பாணியில் தாங்கள் ஹீரோயிசம் செய்வது போல வா ள்போன்ற ஆயுதங்களை கையில் பிடித்தபடி தங்களிடையே ஒருவருக்கொருவர் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையிலான வாசகங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை தொடர்ந்து பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் யார் தாதா, யாருக்கு யார் டான் என்ற விரோத மனப் போக்கு இளைஞர்களின் மனதில் வேரூன்றி ஒருவருக்கொருவர் கோஷ்டியாக உருமாறி ஏற்பட்ட ஆத்திரத்தை முன்வைத்து போதைப் பொருள்கள் பயன்படுத்திய கையோடு கொலை சம்பவம் அரங்கேறியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்தவர்களும் வெவ்வேறு சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்பதாலும், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியுள்ளதாலும் போலீசார்கள் குவிக்கப்பட்டு மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு ஆங்காங்கே பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
