தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஸ்டாலின் தனது பதிவில், “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது என்பதே எனது நிலைப்பாடு. அதன்படி திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “எங்கள் தோழமை இயக்கங்களான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமை கட்சிகள் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை மதிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால், தவெக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், “ஆட்சி அமைய வழிவகுத்த எல்லோரின் நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில் தவெக இறங்கியுள்ளது. Clean Politics என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் Dirty Politics செய்து வருகின்றனர். பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து, அவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா? இல்லை அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களைத் தூக்கும் சக்தியா?” என்று தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்தும் நிலை உருவாகியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
“Return Gift” எச்சரிக்கைமுதலமைச்சர் விஜய்யை நேரடியாக உரையாற்றிய ஸ்டாலின், “மாண்புமிகு முதல்வர் அவர்களே, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்கள் என்ன Return Gift கொடுக்கப் போகிறீர்கள் என்பதையும் மக்கள் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று எச்சரித்தார்.
இறுதியாக, “திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில் உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்று வலியுறுத்தினார்.
