மராட்டியத்தில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (67) தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்தி கொண்டு பல பெண்களை கவர்ந்துள்ளார். இதன்பின்னர், அவர்களை மிரட்டியும், உன்னுடைய கணவர் மரணம் அடைந்து விடுவார், குடும்பத்தினர் உயிரிழந்து விடுவர் என மிரட்டி பல பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.
இது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தெய்வீக சக்தி தனக்கு இருக்கிறது என்றும் சூனியம் வைத்து விடுவேன் என்றும் பெண்களை மிரட்டி வந்திருக்கிறார்.
3 ஆண்டுகளாக பெண் ஒருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் கடந்த மார்ச் 18-ல் முதன்முறையாக போலீசார் அவரை கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் தகாத உறவில் இருக்கும் பாலியல் வீடியோக்கள் வைரலாக பரவின.
அவருக்கு அரசியல் பலம், பண பலம் உள்ளது என கூறப்படுகிறது. இதில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவருடைய சீடர்களாக உள்ளனர்.
அசோக் காரத்துக்கு எதிராக பாலியல் வன்கொடுமை, பாலியல் சுரண்டல் மற்றும் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், அமலாக்க துறை நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவர், தன்னை கடவுள் சிவனின் தோற்றம் என்று அவரை தேடி வரும் பக்தர்களிடம் கூறியுள்ளார். சூனியம் வைத்து விடுவேன் என்றும், ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் பாம்புகளை வைத்தும், புலித்தோல்களை காண்பித்தும் அவர்களை மிரட்டி பணிய வைத்துள்ளார். துரதிர்ஷ்டம் வரும், மரணம் வரும் என்ற அச்சத்தில், பக்தர்கள் அவருக்கு நிறைய பணம் தந்துள்ளனர்.
ஒருவர் ரூ.5.6 கோடியும், மற்றொருவர் ரூ.3.8 கோடியும் பணம் தந்துள்ளனர். இதன்படி ரூ.70 கோடி வரை மோசடி செய்துள்ளார். இதனை அமலாக்க துறைகள் நடத்திய விசாரணையின்போது கண்டறிந்து உள்ளனர்.
பணம் வந்ததும், வெவ்வேறு நபர்களின் பெயரில், அவர்களுக்கு தெரியாமலோ அல்லது அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலோ வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்று, 60 தனி நபர் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதில், தன்னுடைய மொபைல் எண்களை இணைத்து, தன்னையே நாமினியாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதில், உதவியாளர் அரவிந்த் பவாகேவும் அவருக்கு துணையாக இருந்திருக்கிறார்.
