டில்லியில் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களின் 3 நாட்கள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கி இருக்கிறது. டெல்லியில் மே 21 (இன்று) முதல் மே 23 வரை நடைபெற்று வரும் இந்த 3 நாள் ஆட்டோ மற்றும் Cab ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்திற்கு எரிபொருள் விலை உயர்வு, குறைந்த கட்டண நிர்ணயம் மற்றும் அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத் போராட்டத்தில் சுமார் 68-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்றுள்ளன. குறிப்பாக டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை என்று போக்குவரத்து சங்கங்கள் கூறியுள்ளன.
எனவே தற்போதைய பணவீக்கம், விலைவாசி உயர்வு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் மற்றும் காப்பீட்டுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலுக்கு ஏற்ப பயண கட்டணங்களை உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். டெல்லி மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கினாலும், ஆப்-அடிப்படையிலான கேப் சர்விஸ் மற்றும் ஆட்டோக்கள் கிடைக்காததால் டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் காசியாபாத் பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு சில வாகனங்கள் இயக்கப்பட்டாலும் அதிலும் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
