எபோலா நோய் பரவல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு உத்தரவுக்கு பிறகு எபோலா வைரஸ் பரவல் எதிரொலியால் ஒன்றிய அரசின் அறிவுரையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. காங்கோ மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள எபோலா நோய் பரவலை, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச கவலையளிக்கும் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் நோய் தடுப்பு மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் நோய் பாதிப்பு அபாயம் குறைவாக இருப்பதாகக் கருதப்பட்டாலும், சர்வதேச வர்த்தகம் மற்றும் பயணங்களைக் கருத்தில் கொண்டு, ஆரோக்கிய அமைப்பின் அனைத்து நிலைகளிலும் போதிய தயார்நிலை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நோய்க்கான கண்காணிப்பு, மருத்துவமனை தயார் நிலை, இதற்கான பரிசோதனை வசதிகள், விமான நிலையங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவர்களுக்கான சோதனை, பயணிகளுக்கான வழிகாட்டுதல் குறிப்பாக சுய அறிவிப்புப் படிவம் மற்றும் வெப்ப பரிசோதனை செய்வது நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சரிபார்த்து அவர்களின் விவரங்களின் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
