திருச்சி மாவட்டம் முசிறி பகுதி முழுவதும் சூறாவளி காற்றுடன் கனமழை:
காட்டுப்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் மரங்கள் முறிந்து சேதம்
மின்கம்பங்கள் உடைந்து போக்குவரத்து பாதிப்பு – விவசாயிகள் வேதனை
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது.
காட்டுப்புத்தூர் காந்தி நகர் பகுதியில் பெரிய புளியமரம் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது.
மேலும், காட்டுப்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் சாலை ஓரத்தில் தென்னைமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல், காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாநில நகர் பகுதியில் வீட்டின் மீது பனைமரம் விழுந்ததில் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
மஞ்சமேடு பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றால் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தென்னை மற்றும் புளியமரங்களும் பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததுடன், பல மின்கம்பங்களும் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சேதங்களை ஆய்வு செய்து மின்சாரம் மற்றும் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
