திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல் கோவிலுக்கு வந்துள்ளார். முறைகேடான வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.4,000 கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே (GPay) மூலம் ரூ.4,000 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவர் அமைச்சர் என்பது தெரியவந்த நிலையில், பணம் பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக சிக்கினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விசாரணை நடத்தினார். ஆய்வின் போது பக்தர்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்தது உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதுடன், தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதித் தருமாறு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
